உலகக் கோப்பை மற்றும் பிற போட்டிகளில் தனியார் முதலீட்டைத் திரட்டும் ஃபிஃபாவின் திட்டத்திற்கு உலக அளவில் கடும் எதிர்ப்பு கிளம்பியது. பெரும் எதிர்ப்பைத் தொடர்ந்து, அந்தத் திட்டத்தைக் கைவிட ஃபிஃபாத் தலைவர் ஜியானி இன்பாண்டினோ முடிவு செய்துள்ளார்.

ஃபிஃபா தலைவர் ஜியானி இன்பாண்டினோ, உலகக் கோப்பை மற்றும் பிற போட்டிகளில் தனியார் முதலீட்டாளர்களுக்கு பங்குகளை விற்பனை செய்யும் திட்டத்தை ரத்து செய்வதாக வெள்ளிக்கிழமை அறிவித்தார். செவ்வாய்க்கிழமை இந்தத் திட்டம் அறிவிக்கப்பட்டதிலிருந்து, உலகெங்கிலும் உள்ள கால்பந்து அமைப்புகளிடையே கடும் கண்டனங்கள் எழுந்தன.

யுஇஎஃப்ஏ (UEFA) மற்றும் ஏஎஃப்சி (AFC) போன்ற முக்கிய அமைப்புகள் இன்பாண்டினோவின் தலைமையின் மீது நம்பிக்கையை இழந்துள்ளதாகத் தெரிவித்துள்ளன. கால்பந்து விளையாட்டு என்பது பொதுவானது என்றும், அதன் நிர்வாகத்தில் வெளிப்படைத்தன்மை அவசியம் என்றும் பல்வேறு நாடுகள் வலியுறுத்தியுள்ளன.