பெட்ரோல் பங்கில் வேலை செய்த 21 வயதான பிரியங்கா வர்மா, ஆசியாவின் U23 குத்துச்சண்டை சாம்பியன்ஷிப்பில் ஹெவிவெயிட் பிரிவில் வெள்ளிப் பதக்கம் வென்று சாதனை படைத்துள்ளார். கடும் வறுமை மற்றும் சவால்களுக்கு மத்தியிலும் அவர் இந்த வெற்றியைத் தட்டிச் சென்றுள்ளார்.

சண்டிகரில் உள்ள ஒரு பெட்ரோல் பங்கில் வேலை செய்த பிரியங்கா வர்மா, தனது குடும்பத்தின் பொருளாதார நெருக்கடியைச் சமாளிக்கப் போராடினார். அவரது தாயார் ஒரு வீட்டுப் பணியாளராகச் சம்பாதித்து குடும்பத்தை நடத்தினார். தனது குத்துச்சண்டை பயிற்சியின் செலவுகளுக்காகவும், குடும்ப உதவிகாகவும் பிரியங்கா பெட்ரோல் பங்கில் வேலை செய்ய வேண்டியிருந்தது. அதிகாலையில் பயிற்சி எடுத்துவிட்டு, நீண்ட நேர வேலைக்குப் பிறகு மீண்டும் பயிற்சி செய்வது என அவரது வாழ்க்கை மிகவும் சவாலானதாக இருந்தது.

இந்தக் கடின உழைப்பிற்குப் பலன் கிடைத்துள்ளது. ஜகார்த்தாவில் நடைபெற்ற ஆசியாவின் U23 குத்துச்சண்டை போட்டியில், ஹெவிவெயிட் (+81 கிலோ) பிரிவில் பிரியங்கா வெள்ளிப் பதக்கம் வென்றார். உஸ்பெகிஸ்தானின் சோபிராகோன் ஷாகோபிதினோவாவிடம் தோல்வியடைந்தாலும், தனது முதல் சர்வதேச அனுபவத்தில் இந்த வெற்றி அவருக்குப் பெரும் மகிழ்ச்சியைத் தந்துள்ளது.

வெற்றிகளுக்குப் பின்னால் பிரியங்காவின் வாழ்க்கையில் பல போராட்டங்கள் உள்ளன. அவரது வசிப்பிடம் மிகவும் மோசமான நிலையில் உள்ளது மற்றும் கூரை வழியாக நீர் கசிகிறது. உடல் எடையைக் குறைப்பதற்காகத் தொடங்கிய இந்தப் பயணம், இன்று அவரை ஒரு சர்வதேச தடகள வீரராக உயர்த்தியுள்ளது.