2027 ஆம் ஆண்டு நடைபெறவுள்ள போர்டர்-கவாஸ்கர் டிராபி முன்னதாக ஆஸ்திரேலியா எந்த ஒரு பயிற்சி போட்டியையும் விளையாடாது என்று அதன் தலைமை பயிற்சியாளர் ஆண்ட்ரூ மெக்டொனால்ட் அறிவித்துள்ளார்.

ஜனவரி 2027 இல் இந்தியாவில் நடைபெறவுள்ள போர்டர்-கவாஸ்கர் டிராபி தொடருக்காக ஆஸ்திரேலிய அணி ஒரு வித்தியாசமான திட்டத்தை வகுத்துள்ளது. இந்தியாவிற்கு வருவதற்கு முன்பு எந்த ஒரு பயிற்சி போட்டியையும் விளையாடப் போவதில்லை என்று ஆஸ்திரேலிய தலைமை பயிற்சியாளர் ஆண்ட்ரூ மெக்டொனால்ட் தெரிவித்துள்ளார். அதற்குப் பதிலாக, இந்திய துணைக்கண்டத்தின் காலநிலைக்கு ஏற்ப தங்களை தயார்படுத்திக்கொள்ள ஒரு சிறிய பயிற்சி முகாம் நடத்த திட்டமிட்டுள்ளனர்.

இந்த ஐந்து டெஸ்ட் போட்டிகள் ஜனவரி 21 முதல் நாக்பூரில் தொடங்க உள்ளன. நாக்பூர், சென்னை, குவஹாத்தி, ராஞ்சி மற்றும் அகமதாபாத் ஆகிய இடங்களில் போட்டிகள் நடைபெறவுள்ளன. 2004-05 சீசனுக்குப் பிறகு ஆஸ்திரேலியா இந்தியாவில் எந்த டெஸ்ட் தொடரையும் வெல்லவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. எனவே, இந்திய மண்ணின் சூழலை ஒத்த ஒரு இடத்தை தேர்வு செய்து பயிற்சியில் ஈடுபட ஆஸ்திரேலியா திட்டமிட்டுள்ளது.