இந்திய மகளிர் ஹாக்கி அணியின் முன்னாள் கேப்டன் அசுந்தா லக்ரா, அவர் மீது சுமத்தப்பட்ட அனைத்து குற்றச்சாட்டுகளையும் மறுத்துள்ளார். மேலும், ஹாக்கி இந்தியாவின் அறநெறி குழுவின் (Ethics Committee) அதிகார வரம்பையும் அவர் கேள்வி எழுப்பியுள்ளார்.
இந்திய மகளிர் ஹாக்கி அணியின் முன்னாள் கேப்டன் மற்றும் தேர்வாளரான அசுந்தா லக்ரா, மற்றொரு வீரர் அவர் மீது சுமத்தியுள்ள அனைத்து குற்றச்சாட்டுகளையும் திட்டவட்டமாக மறுத்துள்ளார். புதன் கிழமையன்று ஹாக்கி இந்தியா அறநெறி குழுவின் தலைவரான ஓய்வு பெற்ற நீதிபதி ராகவேந்திர குமாருக்கு அனுப்பிய பதிலில், இந்த புகார்கள் முற்றிலும் பொய்யானவை மற்றும் ஆதாரமற்றவை என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.
அறநெறி குழுவின் செயல்பாட்டு முறை மற்றும் அதன் அதிகார வரம்பு குறித்தும் அசுந்தா கேள்வி எழுப்பினார். ஹாக்கி இந்தியாவின் துணை விதிகளின்படி, அறநெறி குழு தானாக முன்வந்து விசாரணையைத் தொடங்க முடியாது என்றும், தலைவர் மூலம் முறையான பரிந்துரை வந்தால்தான் விசாரணை நடத்த முடியும் என்றும் அவர் வாதிட்டுள்ளார். மேலும், இந்த விசாரணையின் நம்பகத்தன்மையையும் அவர் கேள்வி எழுப்பியுள்ளார்.