2026 ஃபிஃபா உலகக் கோப்பைத் தொடரின் போது லியோனல் மெஸ்ஸி மற்றும் கிறிஸ்டியானோ ரொனால்டோ உள்ளிட்ட முன்னணி கால்பந்து நட்சத்திரங்கள் கடுமையான மிரட்டல்களை எதிர்கொண்டனர். மெஸிக்கிற்கு குண்டு மிரட்டல் விடுக்கப்பட்டதோடு, ரொனால்டோவின் தங்குமிடத்தைப் பற்றிய தகவல்களைத் திரட்டிய நபர் கைது செய்யப்பட்டார்.
2026 ஃபிஃபா உலகக் கோப்பைத் தொடரின் போது உலகின் முன்னணி கால்பந்து நட்சத்திரங்களின் பாதுகாப்பு குறித்த தகவல்கள் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளன. ஸ்பானிஷ் ஊடகமான Informacion.es அறிக்கையின்படி, லியோனல் மெஸ்ஸி உட்பட பல வீரர்கள், அதிகாரிகள் மற்றும் நடுவர்கள் கடுமையான மிரட்டல்களை எதிர்கொண்டனர். இதில் வெடிகுண்டுத் தாக்குதல் மிரட்டல்கள் மற்றும் வீரர்களைக் கண்காணித்தல் போன்ற ஆபத்தான தகவல்கள் அடங்கும்.
மெஸிக்கிற்கு எதிராக டல்லாஸில் ஒரு நபர் 'ஹோம்மேட் குண்டு' மற்றும் துப்பாக்கி வைத்திருப்பதாக மிரட்டல் விடுத்தார். மேலும் அட்லாண்டாவில் அரஜென்டினா - எகிப்து போட்டிக்கு முன்னதாக, ஒரு நபர் தனது உடலில் நான்கு குண்டுகளைக் கட்டிக்கொண்டு மைதானத்திற்குள் நுழைவதாக மிரட்டினார். இதனால் பாதுகாப்புப் படையினர் மிகுந்த எச்சரிக்கையுடன் செயல்பட்டனர்.
மெஸ்ஸி மட்டுமல்லாது கிறிஸ்டியானோ ரொனால்டோவும் இலக்காகியிருந்தார். ரொனால்டோ தங்கியிருக்கும் இடத்தைப் பற்றிய தகவல்களைச் சேகரிக்க முயன்ற ஒரு சந்தேகத்திற்குரிய நபர் கைது செய்யப்பட்டார். மேலும், பிரெஞ்சு நடுவர் பிரான்சுவா லெடெகசியருக்கு 6,000-க்கும் மேற்பட்ட மிரட்டல் செய்திகள் வந்ததாகக் கூறப்படுகிறது. எப்.பி.ஐ மற்றும் சர்வதேச காவல்துறையினர் இணைந்து இந்த மிரட்டல்களைக் கையாள நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.