இங்கிலாந்தின் உள்நாட்டு ஒருநாள் கோப்பை போட்டியில் ஹாம்ப்ஷயர் அணியின் பேட்ஸ்மேன் டோபி ஆல்பர்ட் தொடர்ந்து 6 பந்துகளில் 6 சிக்ஸர்களை விளாசி சாதனை படைத்துள்ளார். இவரது அதிரடியான ஆட்டத்தால் ஹாம்ப்ஷயர் அணி சசெக்ஸ் அணிக்கு எதிராக அபார வெற்றி பெற்றது.

இங்கிலாந்தில் நடைபெற்று வரும் உள்நாட்டு ஒருநாள் கோப்பை கிரிக்கெட் போட்டியில் ஹாம்ப்ஷயர் அணி சார்பாக விளையாடிய டோபி ஆல்பர்ட் என்ற பேட்ஸ்மேன் வரலாற்று சாதனை படைத்துள்ளார். சசெக்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் அவர் எதிர்கொண்ட தொடர்ந்து 6 பந்துகளில் 6 சிக்ஸர்களை பறக்கவிட்டு மைதானத்தை அதிரவைத்தார். இந்த சிக்ஸர்கள் ஒரே ஓவரில் அடிக்கப்படவில்லை என்றாலும், இரண்டு வெவ்வேறு ஓவர்களில் அவர் எதிர்கொண்ட தொடர்ந்து 6 பந்துகளில் இந்த சாதனையை நிகழ்த்தியுள்ளார்.

டோபி ஆல்பர்ட் வெறும் 37 பந்துகளில் 5 பவுண்டரிகள் மற்றும் 8 சிக்ஸர்களுடன் 86 ரன்கள் குவித்தார். இதனால் முதலில் பேட் செய்த ஹாம்ப்ஷயர் அணி 9 விக்கெட் இழப்பிற்கு 383 ரன்கள் எடுத்தது. சசெக்ஸ் அணியின் சார்லி டியர் 111 ரன்கள் எடுத்து போராடிய போதிலும், அந்த அணி 51 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியடைந்தது. இந்த வெற்றியின் மூலம் ஹாம்ப்ஷயர் அணி நாக் அவுட் சுற்றுக்கு முன்னேறும் வாய்ப்பை பிரகாசப்படுத்தியுள்ளது.