வாட்ஸ்அப் தனது குரூப் சாட் வசதியை மேம்படுத்த புதிய அப்டேட்டை வெளியிட்டுள்ளது. இதில் '@all' நோட்டிபிகேஷன், அநாமதேய வாக்கெடுப்பு (Anonymous Polls) மற்றும் சிறிய தனிப்பட்ட குழுக்களை உருவாக்கும் வசதிகள் உள்ளன.
வாட்ஸ்அப் தனது பயனர்களுக்காக புதிய அம்சங்களை அறிமுகப்படுத்தியுள்ளது. புதிய '@all' வசதியின் மூலம், குரூப் மியூட் செய்திருந்தாலும் அனைத்து உறுப்பினர்களுக்கும் அறிவிப்புகளை அனுப்ப முடியும். இருப்பினும், ஸ்பேம் தவிர்ப்பதற்காக 32 நபர்களுக்கு மேற்பட்ட குழுக்களில் நிர்வாகிகளால் (Admins) மட்டுமே இதைப் பயன்படுத்த முடியும்.
வாக்கெடுப்பு (Polls) வசதியிலும் மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன. பயனர்கள் இப்போது வாக்கெடுப்பு முடிவடைய ஒரு காலக்கெடுவை நிர்ணயிக்கலாம் மற்றும் வாக்களிப்பவர்களின் பெயர்களை மறைக்கும் வசதியையும் பயன்படுத்தலாம். மேலும், வாக்கெடுப்பு கேள்வியை பதிவிட்ட 15 நிமிடங்களுக்குள் திருத்திக் கொள்ளும் வசதியும் வழங்கப்பட்டுள்ளது.
தற்போதுள்ள குழுக்களிலிருந்து எளிதாக சிறிய துணை குழுக்களை உருவாக்கும் வசதியும், விரைவில் அறிமுகமாகவுள்ள 'யூசர்நேம்' (Username) வசதியும் பயனர்களுக்கு கூடுதல் பாதுகாப்பை வழங்கும். இதன் மூலம் தொலைபேசி எண்ணைப் பகிராமலேயே தொடர்பு கொள்ள முடியும்.