ஆஸ்திரேலியாவில் பதின்ம வயதினருக்கான சமூக ஊடகத் தடை அமலுக்கு வரும் நிலையில், 16 வயதிற்குட்பட்டவர்கள் பயன்படுத்தும் சந்தேகத்திற்குரிய 7,56,000 கணக்குகளை மெட்டா நீக்கியுள்ளதாக தெரிவித்துள்ளது.
ஃபேஸ்புக் மற்றும் இன்ஸ்டாகிராம் நிறுவனமான மெட்டா, ஆஸ்திரேலியாவில் 16 வயதிற்குட்பட்ட பதின்ம வயதினருக்கான சமூக ஊடகத் தடை அமலுக்கு வரும் நிலையில், சுமார் 7,56,000 சந்தேகத்திற்குரிய கணக்குகளை நீக்கியுள்ளதாக வியாழக்கிழமை அறிவித்தது. இதில் 4,62,000 இன்ஸ்டாகிராம் கணக்குகளும், 2,94,000 ஃபேஸ்புக் கணக்குகளும் அடங்கும்.
குழந்தைகளின் உடல் மற்றும் மன ஆரோக்கியத்தைப் பாதுகாப்பதற்காக ஆஸ்திரேலிய அரசாங்கம் இந்த வரலாற்றுச் சிறப்புமிக்க சட்டத்தைக் கொண்டு வந்தது. இந்த சட்டத்தை மீறும் நிறுவனங்களுக்கு அபராதத் தொகையை இரட்டிப்பாக்க அரசு முடிவு செய்துள்ளது. மெட்டா நிறுவனம் தனது செயற்கை நுண்ணறிவு (AI) தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி, பயனர்களின் பிறந்தநாள் மற்றும் பள்ளித் தரவுகள் மூலம் வயது குறைந்த கணக்குகளைக் கண்டறிந்து வருகிறது.