ஓணம் விடுமுறைக்குப் பிறகு கேரளாவிலிருந்து வளைகுடா நாடுகளுக்குச் செல்லும் நேரடி விமானக் கட்டணம் வழக்கத்தை விட 10 முதல் 15 மடங்கு அதிகரித்துள்ளது. குறிப்பாக ஆகஸ்ட் கடைசி வாரத்தில் இது அதிகமாக உள்ளது.

ஓணம் விடுமுறை முடிந்து வளைகுடா நாடுகளுக்குத் திரும்பும் பயணிகளை இலக்கு வைத்து விமான நிறுவனங்கள் டிக்கெட் விலையைத் திடீரென உயர்த்தியுள்ளன. வளைகுடா நாடுகளில் கோடை விடுமுறைக்குப் பிறகு பள்ளிகள் திறக்கப்படுவதும் இந்த விலை உயர்வுக்கு ஒரு முக்கிய காரணமாகும். ஆகஸ்ட் 30 அன்று கேரளாவிலிருந்து வளைகுடா செல்லும் சராசரி விமானக் கட்டணம் ₹80,000 முதல் ₹1.5 லட்சம் வரை இருக்கலாம் என்று கணிக்கப்பட்டுள்ளது.

உதாரணமாக, கொச்சியிலிருந்து ஷார்ஜா செல்லும் எகனமி கிளாஸ் டிக்கெட் ₹84,457 ஆகவும், கொச்சியிலிருந்து பஹ்ரைன் செல்லும் டிக்கெட் ₹1,02,651 ஆகவும் உள்ளது. திருவனந்தபுரத்திலிருந்து பஹ்ரைன் செல்லும் டிக்கெட் ₹1,47,444 வரை உயர்ந்துள்ளது. பயண முகவர் சங்கத்தின் தலைவர் கே.வி. முரளிதரன் கூறுகையில், பண்டிகை கால கூட்டத்தைப் பயன்படுத்தி அதிக லாபம் ஈட்டும் நோக்கில் இந்த விலை உயர்வு மேற்கொள்ளப்படுவதாகக் குறிப்பிட்டுள்ளார்.