வேலையை இழந்த H-1B பணியாளர்களுக்கு வழங்கப்படும் 60 நாள் கால அவகாசத்தை நீக்க அமெரிக்க பாதுகாப்புத் துறை திட்டமிட்டுள்ளது. இந்த நடவடிக்கை நடைமுறைக்கு வந்தால், அமெரிக்காவில் பணிபுரியும் இந்தியத் தொழில் வல்லுநர்கள் மற்றும் அவர்களது குடும்பத்தினர் பெரும் நெருக்கடிக்குள்ளாகலாம்.
அமெரிக்காவின் உள்நாட்டு பாதுகாப்புத் துறை (DHS), குறிப்பிட்ட H-1B பணியாளர்கள் வேலையை இழந்த பிறகு தங்குவதற்கு வழங்கப்படும் 60 நாள் கால அவகாசத்தை (Grace Period) ரத்து செய்ய முன்மொழிந்துள்ளது. தற்போதுள்ள விதிகளின்படி, வேலை இழந்தவர்கள் புதிய வேலையைத் தேட அல்லது விசா வகையை மாற்ற இந்த 60 நாட்களைப் பயன்படுத்திக் கொள்ளலாம். ஆனால் இந்த புதிய முன்மொழிவு அங்கீகரிக்கப்பட்ட தங்குமிட காலம் முடிவதற்கு முன்பே வேலை முடிந்தால், அந்தப் பாதுகாப்பை நீக்கிவிடும்.
இந்தத் திட்டம் தற்போது வெள்ளை மாளிகையின் நிர்வாகம் மற்றும் வரவு செலவுத் திட்ட அலுவலகத்தின் (OMB) ஆய்வில் உள்ளது. அமெரிக்கத் தொழிலாளர்களுக்குப் பதிலாக வெளிநாட்டுத் தொழிலாளர்களைப் பயன்படுத்துவதைத் தடுக்கும் நோக்கில், H-1B திட்டத்தைக் கடுமையாக்கும் டிரம்ப நிர்வாகத்தின் முயற்சியின் ஒரு பகுதியாக இது பார்க்கப்படுகிறது. இந்தியர்கள் அமெரிக்காவில் அதிகப்படியான H-1B விசாக்களைப் பயன்படுத்துவதால், இந்த மாற்றம் அவர்களைப் பெரிதும் பாதிக்கும்.
இந்த முன்மொழிவு இறுதி செய்யப்பட்டால், வேலையை இழந்த பணியாளர்கள் உடனடியாகத் தங்கள் தங்குமிட உரிமையை இழக்க நேரிடும். இருப்பினும், தற்போதைய 60 நாள் விதி இன்னும் அமலில் உள்ளது. புதிய விதி அமலுக்கு வருவதற்கு முன் பொதுமக்களிடமிருந்து கருத்துகள் கேட்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.