ஆன்லைன் மோசடி மையங்களில் வேலை செய்ய மக்களைக் கட்டாயப்படுத்துபவர்களுக்கு மரண தண்டனை வழங்கும் புதிய சட்டத்தை மியான்மரின் ராணுவ ஆதரவு நாடாளுமன்றம் அங்கீகரித்துள்ளது. கிரிப்டோகரன்சி மோசடிகளில் ஈடுபடுபவர்களுக்கு ஆயுள் தண்டனையும் இந்த மசோதாவில் உள்ளது.
மியான்மரின் ராணுவ ஆதரவு நாடாளுமன்றம் செவ்வாய்க்கிழமை ஒரு புதிய சட்டத்தை அங்கீகரித்துள்ளது. ஆன்லைன் மோசடி மையங்களில் பணிபுரிய மக்களைக் கடத்திச் செல்வது அல்லது வன்முறையைப் பயன்படுத்தி கட்டாயப்படுத்துவது போன்ற குற்றங்களுக்கு மரண தண்டனை வழங்க இந்தச் சட்டம் வழிவகை செய்கிறது.
நேப்பிடோவில் நடைபெற்ற கூட்டத்தில் 'ஆன்லைன் மோசடி எதிர்ப்பு மசோதா' நிறைவேற்றப்பட்டது. இந்த சட்டத்தின் படி, ஆன்லைன் மோசடி செய்ய ஒருவரைத் துன்புறுத்துவதன் மூலம் மரணம் ஏற்பட்டால், குற்றவாளிக்கு மரண தண்டனை விதிக்கப்படும். மேலும், ஆன்லைன் மோசடி மையங்களை நடத்துபவர்களுக்கும், டிஜிட்டல் கரன்சி (கிரிப்டோ) மோசடிகளில் ஈடுபடுபவர்களுக்கும் ஆயுள் தண்டனை வழங்கப்படலாம்.
மியான்மரில் நிலவும் உள்நாட்டுப் போர் மற்றும் நிலையற்ற சூழலைப் பயன்படுத்தி சைபர் குற்றக் கும்பல்கள் அங்கு தங்களை நிலைநிறுத்திக் கொண்டுள்ளன. உலகெங்கிலும் உள்ள மக்களைப் பண மோசடியில் ஈடுபடுத்தும் இந்தச் சங்கிலித் தொடரைத் தடுக்க மியான்மர் அரசு இந்த கடுமையான சட்டத்தைக் கொண்டு வந்துள்ளது.