பாகிஸ்தானின் பலுசிஸ்தான் மாகாணத்தில் உள்ள குவெட்டாவின் புறநகர்ப் பகுதியில் நிலக்கரி சுரங்கத்தில் ஏற்பட்ட மீத்தேன் எரிவாயு வெடிப்பில் குறைந்தது 32 தொழிலாளர்கள் உயிரிழந்தனர். மேலும் 10 தொழிலாளர்கள் சுரங்கத்திற்குள்ளேயே சிக்கியுள்ளனர்.

தென்மேற்கு பாகிஸ்தானில் உள்ள ஒரு நிலக்கரி சுரங்கத்தில் ஏற்பட்ட வெடிப்பில் குறைந்தது 32 தொழிலாளர்கள் உயிரிழந்தனர் மற்றும் மேலும் 10 பேர் நிலத்தடியில் சிக்கியுள்ளனர். வியாழக்கிழமை (ஜூலை 30) மீத்தேன் வாயு அதிகரிப்பால் இந்த வெடிப்பு ஏற்பட்டதாக அரசு சுரங்க ஆய்வாளர் கானி பலோச் தெரிவித்துள்ளார்.

மீட்புப் படையினர் இதுவரை 32 உடல்களை மீட்டுள்ளனர். மீத்தேன் வாயு காரணமாக ஆக்சிஜன் அளவு குறைந்துவிட்டதால், மீட்புப் பணிகள் மிகவும் சவாலானதாக உள்ளன. சுரங்கத் தொழிலாளர் சங்கம் இந்த விபத்திற்கு நிர்வாகத்தின் அலட்சியமே காரணம் என்று குற்றம் சாட்டியுள்ளது.

பலுசிஸ்தான் சுரங்கத் துறை அமைச்சர் ஷோயப் நோஷர்வானி, உயிரிழந்த தொழிலாளர்களின் குடும்பங்களுக்கு 5,00,000 பாகிஸ்தான் ரூபாய் இழப்பீடு வழங்கப்படும் என்று அறிவித்துள்ளார். மேலும் விபத்து குறித்த விரிவான விசாரணை நடத்தப்பட உள்ளதாகவும் அவர் கூறினார்.