மேற்கு ஆசியாவில் நிலவும் போர் பதற்றத்தால் அமெரிக்க தூதரகங்கள் தங்கள் குடிமக்களைப் பாதுகாப்பான இடங்களுக்குச் செல்லுமாறு கேட்டுக்கொண்டுள்ளன. விமானத் தகவல்களைச் சரிபார்க்கவும் உள்ளூர் பாதுகாப்பு வழிகாட்டுதல்களைப் பின்பற்றவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
மேற்கு ஆசியாவில் போர் சூழல் எதிர்பாராத விதமாக தீவிரமடையக்கூடும் என்று எச்சரித்துள்ள அமெரிக்க தூதரகங்கள், அங்குள்ள அமெரிக்க குடிமக்களைப் பாதுகாப்பான இடங்களுக்குத் திரும்பத் தயார் நிலையில் இருக்குமாறு கேட்டுக்கொண்டுள்ளன. அம்மான், ஜெருசலேம், மஸ்கட், பாக்தாத் மற்றும் பெய்ரூட் ஆகிய இடங்களில் உள்ள அமெரிக்க தூதரகங்கள் இந்த எச்சரிக்கை விடுத்துள்ளன.
விமானப் போக்குவரத்து ரத்து அல்லது வான்வெளித் தடைகள் ஏற்படக்கூடும் என்பதால், குடிமக்கள் விமான விவரங்களைச் சரிபார்க்கவும், உள்ளூர் அதிகாரிகளின் பாதுகாப்பு ஆலோசனைகளைப் பின்பற்றவும் அறிவுறுத்தப்பட்டுள்ளனர். ஈரானின் கணிக்க முடியாத நடவடிக்கைகள் மற்றும் சமீபத்திய வான்வழித் தாக்குதல்கள் காரணமாக இந்த எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. மேலும், ஜோர்டானில் உள்ள அமெரிக்க ராணுவத் தளங்களுக்குச் செல்ல வேண்டாம் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.