ஹார்முஸ் ஜலசந்தி (Strait of Hormuz) அமெரிக்க கடற்படையின் முழு கட்டுப்பாட்டில் இருப்பதாக அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் அறிவித்துள்ளார். மேலும், ஈரான் கோரிய போர் இழப்பீட்டு கோரிக்கையை நிராகரித்த டிரம்ப், கடந்த 50 ஆண்டுகளில் ஏற்பட்ட சேதங்களுக்கு ஈரானிடமிருந்து இழப்பீடு கேட்குமாறு அமெரிக்க பேச்சுவார்த்தையாளர்களுக்கு உத்தரவிட்டுள்ளார்.

ஓவல் அலுவலகத்தில் செய்தியாளர்களிடம் பேசிய அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், ஹார்முஸ் ஜலசந்தியின் மீது அமெரிக்க கடற்படைக்கு 100 விழுக்காடு கட்டுப்பாடு இருப்பதாக அறிவித்துள்ளார். இந்த கடற்படை முற்றுகை ஒரு இரும்புச் சுவர் போன்றது என்றும், ஈரான் செல்லும் கப்பல்கள் ஹார்முஸ் பகுதிக்குள் நுழைய அனுமதிக்கப்படுவதில்லை என்றும் அவர் தெளிவுபடுத்தியுள்ளார்.

கடந்த ஐந்து மாத கால மோதலில் ஏற்பட்ட சேதங்களுக்கு ஈரான் இழப்பீடு கோரியதற்கு பதிலடி கொடுத்த டிரம்ப், கடந்த 50 ஆண்டுகளில் ஈரான் செய்த சேதங்களுக்கு அமெரிக்காவிற்கு ஈரான் தான் இழப்பீடு வழங்க வேண்டும் என்று கூறினார். யுஎஸ்எஸ் கோல் குண்டுவெடிப்பு மற்றும் காசிம் சுலைமானியின் நடவடிக்கைகள் உள்ளிட்ட பல்வேறு பிராந்திய நிகழ்வுகளைக் குறிப்பிட்ட டிரம்ப், எதிர்கால பேச்சுவார்த்தைகளில் இந்த நிபந்தனையை சேர்க்க அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளார்.