இந்தியாவின் சுற்றுச்சூழல் சட்டங்களை உருவாக்குவதில் உச்ச நீதிமன்றம் முன்னோடியாக இருந்துள்ளது. ஆனால், சமீபத்திய தீர்ப்புகள் அதன் பாரம்பரியத்திலிருந்து விலகிச் செல்கிறதா என்ற கேள்வி எழுந்துள்ளது.
இந்திய சுதந்திரத்தின் ஆரம்ப ஆண்டுகளில் தெளிவான சுற்றுச்சூழல் கொள்கை இல்லை. 1976 ஆம் ஆண்டு அரசியலமைப்பின் 42 வது திருத்தத்தின் மூலம், சுற்றுச்சூழல் பாதுகாப்பை அரசின் வழிகாட்டுதல் கொள்கையாகவும் (பிரிவு 48A), குடிமக்களின் அடிப்படை கடமையாகவும் (பிரிவு 51A (g)) மாற்றியது. 1984 போபால் நச்சுவாயு விபத்திற்குப் பிறகு, உச்ச நீதிமன்றம் சுற்றுச்சூழல் பாதுகாப்பில் தீவிரமான பங்களிப்பை வழங்கியது.
உச்ச நீதிமன்றம் 'முழுமையான பொறுப்பு' (Absolute Liability), 'மாசுபடுத்துபவர் செலுத்த வேண்டும்' (Polluter Pays Principle) மற்றும் 'முன்னெச்சரிக்கை கொள்கை' (Precautionary Principle) போன்ற முக்கியமான சட்டக் கோட்பாடுகளை உருவாக்கியது. மேலும், நிலையான வளர்ச்சி மற்றும் பொது நம்பிக்கை கோட்பாடுகளையும் (Public Trust Doctrine) இது உறுதிப்படுத்தியது.
இருப்பினும், சமீபத்திய காலங்களில் உச்ச நீதிமன்றத்தின் செயல்பாடுகள் குறித்து விவாதங்கள் எழுந்துள்ளன. சுற்றுச்சூழல் அமைப்புகள் முன்வைக்கும் கோரிக்கைகளை நீதிமன்றம் ஆதரித்தாலும், பெரிய உள்கட்டமைப்பு திட்டங்களை எதிர்த்துக் வரும் வழக்குகளில் அதே போன்ற உறுதியான நிலைப்பாட்டை எடுப்பதில் தயக்கம் காட்டுவதாக விமர்சகர்கள் கூறுகின்றனர்.