இமாச்சல பிரதேசத்தில் பெய்து வரும் கனமழை மற்றும் நிலச்சரிவினால் பெரும் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. வாகனங்கள் மண்ணுக்குள் புதைந்துள்ளதோடு, 100-க்கும் மேற்பட்ட சாலைகள் மூடப்பட்டுள்ளன.

இமாச்சல பிரதேசத்தின் சிம்லா உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் திங்கள்கிழமை மாலை பெய்த கனமழை மற்றும் நிலச்சரிவு பெரும் சேதத்தை ஏற்படுத்தியுள்ளது. சம்பாவில் நிலச்சரிவு காரணமாக ஒரு டஜன் வாகனங்கள் இடிபாடுகளுக்குள் புதைந்துள்ளன. நிலச்சரிவு மற்றும் திடீர் வெள்ளத்தால் 108 சாலைகள் மூடப்பட்டுள்ளதாகவும், மின்சாரம் மற்றும் குடிநீர் விநியோகத்தில் பாதிப்பு ஏற்பட்டுள்ளதாகவும் மாநில அவசரக்கால கட்டுப்பாட்டு மையம் தெரிவித்துள்ளது.

அடுத்த 24 மணிநேரத்தில் சம்பா, காங்ரா, குலு, மண்டி, சிம்லா உள்ளிட்ட பகுதிகளில் திடீர் வெள்ள அபாயம் உள்ளதாக வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது. ஜூலை 30 வரை சில மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக 'ஆரஞ்சு எச்சரிக்கை' விடுக்கப்பட்டுள்ளது. மக்கள் ஆற்றுப் பகுதிகளுக்கு அருகில் செல்ல வேண்டாம் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.