பஞ்சாப் மற்றும் ஹரியானா இடையேயான எல்லையை கான்கிரீட் தடுப்புகள் மற்றும் முள் கம்பிகளால் மூடி, டெல்லி நோக்கிப் பேரணி நடத்திய விவசாயிகளை ஹரியானா காவல்துறை தடுத்து நிறுத்தியுள்ளது. விவசாயத் துறையை வர்த்தக ஒப்பந்தத்திலிருந்து விலக்குவது உள்ளிட்ட கோரிக்கைகளை முன்வைக்க அவர்கள் போராடி வருகின்றனர்.
சமுக்தா கிசான் மோச்சா (அரசியல் சாரா) தலைவர் ஜெகத் சிங் டல்லேவால் தலைமையில் 51 விவசாயிகளுடன் சுமார் 150 ஆதரவாளர்கள் டெல்லியின் ஜந்தர் மந்தர் நோக்கி நடைப்பயணம் மேற்கொண்டனர். ஞாயிற்றுக்கிழமை ஹரியானாவின் ஜின்த் பகுதியில் உள்ள கானௌரி-டேட்டா சிங்வாலா எல்லையில் ஹரியானா போலீசார் அவர்களைத் தடுத்து நிறுத்தியதுடன், பல விவசாயத் தலைவர்களையும் தடுப்புக்காவலில் வைத்துள்ளனர்.
இந்த விவசாயிகளின் முக்கிய கோரிக்கைகளில், முன்மொழியப்பட்ட இந்தியா-அமெரிக்க வர்த்தக ஒப்பந்தத்திலிருந்து விவசாயத்தை விலக்குதல், குறைந்தபட்ச ஆதரவு விலைக்கு (MSP) சட்டப்பூர்வ உத்தரவாதம் அளித்தல், விவசாயக் கடன்களை முழுமையாகத் தள்ளுபடி செய்தல் மற்றும் விவசாயிகளுக்கு எதிரான வழக்குகளைத் திரும்பப் பெறுதல் ஆகியவை அடங்கும். போராட்டத்தைத் தடுக்கப் போராளிகள் செல்லும் பாதையில் நீர் பீரக்கிகள் மற்றும் கடுமையான பாதுகாப்புப் படையினர் குவிக்கப்பட்டுள்ளனர்.
விவசாயிகள் அமைதியாக நடைப்பயணம் மேற்கொண்டு வருவதாகவும், டிராக்டர்கள் அல்லது டிராலிகளைப் பயன்படுத்தவில்லை என்றும் டல்லேவால் தெரிவித்தார். போராட்டத்தைத் தொடர அனுமதி மறுக்கப்பட்டதால், விவசாயிகள் தடையுத்தரவு உள்ள இடத்திலேயே தங்களின் போராட்டத்தைத் தொடரவும் நீதிமன்றத்தின் தலையீட்டை நாடவும் முடிவு செய்துள்ளனர்.