EPFO தனது பிஎஃப் திரும்பப் பெறும் செயல்முறையை வேகப்படுத்தியுள்ளது. புதிய தானியங்கி முறை மூலம் 24 முதல் 48 மணி நேரத்திற்குள் பணம் உங்கள் கணக்கில் வரவு வைக்கப்படும்.
EPFO வாடிக்கையாளர்களுக்கு ஒரு மகிழ்ச்சியான செய்தி கிடைத்துள்ளது. பிஎஃப் பணத்தை எடுக்கும் செயல்முறை இனி மிகவும் எளிமையாகவும் வேகமாகவும் இருக்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. முன்பு பிஎஃப் விண்ணப்பங்கள் முடிக்க 7 முதல் 10 நாட்கள் வரை ஆகும் நிலையில், புதிய 'ஆட்டோ செட்டில்மென்ட்' முறையின் மூலம் 24 முதல் 48 மணி நேரத்திற்குள் பணம் உங்கள் வங்கிக் கணக்கிற்கு வந்துவிடும். சில சந்தர்ப்பங்களில், விண்ணப்பித்த அன்றைய தினமே பணத்தைப் பெற முடியும்.
மத்திய தொழிலாளர் நல ஆணையர் ரமேஷ் கிருஷ்ணமூர்த்தி கூறுகையில், இந்த புதிய அமைப்பின் மூலம் 90 சதவீத கோரிக்கைகள் தாமதமின்றி சரிசெய்யப்படுகின்றன என்று தெரிவித்தார். மருத்துவ அவசரங்கள், கல்வி அல்லது வீடு வாங்குதல் போன்றத் தேவைகளுக்குப் பணம் தேவைப்படும் ஊழியர்கள் இனி நீண்ட காலம் காத்திருக்க வேண்டியதில்லை. மேலும், விரைவில் UPI மூலமாகவும் பிஎஃப் பணத்தைப் பெறும் வசதி அறிமுகப்படுத்தப்பட உள்ளது.