பெங்களூரைத் தளமாகக் கொண்ட ஃபெர்ல் (Furrl) நிறுவனத்தின் AI ஸ்டைலிங் இன்ஜின் மற்றும் வணிகச் செயலை ரிலையன்ஸ் ரீடைல் வென்ச்சர்ஸ் லிமிடெட் கையகப்படுத்தியுள்ளது. வாடிக்கையாளர்களுக்குத் தனிப்பயனாக்கப்பட்ட ஷாப்பிங் அனுபவத்தை வழங்க இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
பெங்களூரைச் சேர்ந்த AI சார்ந்த ஃபேஷன் டிஸ்கவரி தளமான ஃபெர்ல், அதன் தொழில்நுட்பம் மற்றும் வணிகச் செயலியை ரிலையன்ஸ் ரீடைல் வென்ச்சர்ஸ் லிமிடெட் (RRVL) கையகப்படுத்தியுள்ளதை உறுதி செய்துள்ளது. ரிலையன்ஸ் ரீடைல் தனது நுகர்வோர் வணிகங்களில் செயற்கை நுண்ணறிவை (AI) ஒருங்கிணைத்து, மிகவும் தனிப்பயனாக்கப்பட்ட மற்றும் எளிமையான ஷாப்பிங் அனுபவங்களை வழங்குவதற்கான ஒரு பரந்த உத்தியின் ஒரு பகுதியாக இந்த கையகப்படுத்துதல் அமைந்துள்ளது.
ஃபெர்ல் தொழில்நுட்பமானது ஃபேஷன் கேட்டலாக்குகளை தனிப்பட்ட விருப்பங்களுக்கு ஏற்ப முழுமையான ஸ்டைலான ஆடை பரிந்துரைகளாக மாற்றுகிறது. 2022 இல் ஈஷா திவாரி என்பவரால் தொடங்கப்பட்ட ஃபெர்ல், தற்போது 200-க்கும் மேற்பட்ட ஃபேஷன் பிராண்டுகளின் 50,000-க்கும் மேற்பட்ட தயாரிப்புகளைக் கொண்டுள்ளது. இந்த கையகப்படுத்துதலுக்குப் பிறகு, ரிலையன்ஸ் ரீடைலின் டிஜிட்டல் தளங்களில் AI மூலம் பொருட்களைக் கண்டறியும் திறன் மேலும் வலுப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.