உத்தரப்பிரதேசத்தின் வாரணாசியில் வாடகை வீட்டில் வசித்து வந்த ஒரு சமபாலின இளைஞர், அவரது லிவ்-இன் துணையால் கத்தியால் குத்திக் கொல்லப்பட்டார். மோதலுக்குப் பிறகு இந்த கொடூரமான சம்பவம் நடந்துள்ளது.

வாரணாசியில் வசித்து வந்த மேற்கு வங்கத்தைச் சேர்ந்த 26 வயது இளைஞர் தீபன்ஷு ராய், தனது லிவ்-இன் துணையான குஷ் பாண்டேயால் கத்தியால் குத்திக் கொல்லப்பட்டார். திங்கள்கிழமை இரவு அவர்கள் வாடகை வீட்டில் இருந்தபோது ஏற்பட்ட தகராறு காரணமாக இந்த கொலை நடந்துள்ளது. பாண்டே சமையல் கத்தியால் தீபன்ஷுவின் வயிற்றுப் பகுதியில் பலமுறை குத்தியுள்ளார்.

சம்பவத்திற்குப் பிறகு பாண்டே காவல்துறையைத் தொடர்பு கொண்டார். சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் தீபன்ஷு ராய் ஏற்கனவே உயிரிழந்திருப்பதைக் கண்டனர். இருவரும் நீண்ட காலமாக உறவில் இருந்ததாகவும், அடிக்கடி மது அருந்துவதால் அவர்களுக்கு இடையே சண்டைகள் ஏற்பட்டதாகவும் போலீசார் தெரிவித்தனர். குற்றம் சாட்டப்பட்ட பாண்டே தற்போது கைது செய்யப்பட்டுள்ளார்.