சைபர் மோசடி பணத்தைப் பரிமாற்றம் செய்ய பயன்படுத்தப்படும் 'மியூல்' வங்கி கணக்குகளைக் குறிவைத்து நடத்தப்பட்ட சிறப்பு நடவடிக்கையில் தமிழ்நாடு காவல்துறை 837 பேரை கைது செய்துள்ளது.
தமிழ்நாடு காவல்துறையின் சைபர் குற்றப்பிரிவு (CCW) ஆகஸ்ட் 6 முதல் தொடங்கிய 48 மணிநேர மாநில அளவிலான சிறப்பு நடவடிக்கையில் 837 சைபர் குற்றவாளிகளை கைது செய்துள்ளது. சைபர் மோசடி மூலம் பெறப்பட்ட பணத்தைப் பெறுவதற்கும் எடுப்பதற்கும் வங்கி கணக்குகளைத் தவறாகப் பயன்படுத்துபவர்களைக் கண்டறிவதே இந்த நடவடிக்கையின் முக்கிய நோக்கம்.
டிஜிபி மகேஷ் குமார் அகர்வால் அவர்களின் அறிவுறுத்தலின்படி, பல்வேறு மாவட்டங்களில் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது. 545 கோடி ரூபாய்க்கும் அதிகமான மோசடி புகார்களை ஆய்வு செய்ததில், 601 வழக்குகளில் தொடர்புடையவர்கள் கைது செய்யப்பட்டனர். மேலும், 204 மொபைல் போன்கள் மற்றும் இதர மின்னணு சாதனங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.