அமிர்தசரஸ் கிராமப்புற போலீசார் 690 கிராம் எடையுள்ள ஐஇடி (வெடிகுண்டு) சாதனத்தை மீட்டு, போலீஸ் நிலையத்தை குறிவைத்து நடத்தவிருந்த பயங்கரவாத சதியை முறியடித்துள்ளனர். சுதந்திர தின பாதுகாப்பு எச்சரிக்கைக்கு மத்தியில் இந்த மீட்பு நடவடிக்கை பெரும் அசம்பாவிதத்தை தவிர்த்துள்ளது.
பஞ்சாப் மாநிலம் அமிர்தசரஸ் கிராமப்புற போலீசார், காவல்துறை நிறுவனத்தை குறிவைத்து நடத்த திட்டமிடப்பட்டிருந்த ஒரு பயங்கரவாத சதியை முறியடித்துள்ளனர். சோதனையின் போது மின்னணு டெட்டனேட்டருடன் கூடிய 690 கிராம் எடையுள்ள ஐஇடி (இம்ப்ரூவைஸ்டு எக்ஸ்புளோசிவ் டிவைஸ்) வெடிபொருளை போலீசார் பறிமுதல் செய்துள்ளனர். சனிக்கிழமை நள்ளிரவில் கண்டெடுக்கப்பட்ட இந்த வெடிபொருள், பின்னர் வெடிகுண்டு செயலிழப்பு பிரிவினரால் பாதுகாப்பாக செயலிழக்கப்பட்டது.
பஞ்சாப் காவல்துறை இயக்குநர் ஜெனரல் (டிஜிபி) கௌரவ் யாதவ் கூறுகையில், இந்த மீட்பில் பேட்டரி, டைமர் மற்றும் இரும்புப் பெட்டி ஆகியவையும் அடங்கும் என்று தெரிவித்தார். உதவி ஆய்வாளர் குல்பீர் சிங் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தபோது, கக்கோமஹால் போலீஸ் சோதனைச் சாவடி எல்லைக்குட்பட்ட பகுதியில் சந்தேகத்திற்கிடமான மெழுகு சுற்றப்பட்ட கருப்பு நிற பாக்கெட் கிடப்பதைக் கண்டறிந்தார்.
சுதந்திர தினத்தை முன்னிட்டு அமிர்தசரஸ் கிராமப்புறத்தில் சோதனைச் சாவடிகள் அமைக்கப்பட்டு தீவிர கண்காணிப்புப் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வந்ததாக எஸ்பி கன்வல்பிரீத் சிங் சாஹல் தெரிவித்தார். இச்சம்பவம் தொடர்பாக அமிர்தசரஸ் கிராமப்புறத்தில் உள்ள ராம்தாஸ் காவல் நிலையத்தில் வெடிபொருட்கள் சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டு விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.