அமெரிக்க நடிகர் சாட்விக் போஸ்மேனின் சொத்து நிர்வாகம் தொடர்பாக அவரது சகோதரர்கள் அவரது விதவை டெய்லர் சிமோன் லெட்வார்டு மீது நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்துள்ளனர். சொத்து விநியோகத்தில் முறைகேடு நடப்பதாக அவர்கள் குற்றம் சாட்டுகின்றனர்.

பிளாக் பான்தர் புகழ் சாட்விக் போஸ்மேனின் பல மில்லியன் டாலர் மதிப்புள்ள சொத்துக்களைக் கையாளுவதில் முறைகேடு நடப்பதாகக் கூறி அவரது சகோதரர்கள் லோஸ் ஏஞ்சல்ஸ் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளனர். போஸ்மேனின் விதவை டெய்லர் சிமோன் லெட்வார்டு சொத்துக்களைப் பகிர்ந்தளிக்கவில்லை என்றும், அவர் சொத்தின் நிர்வாகியாகத் தொடர தகுதியற்றவர் என்றும் அவரது சகோதரர்கள் டெரிக் மற்றும் கெவின் போஸ்மேன் தெரிவித்துள்ளனர்.

2020 ஆம் ஆண்டு போஸ்மேன் காலமானபோது, அவர் எந்தவித உயில் எழுதி வைக்கவில்லை. நீதிமன்ற உத்தரவின்படி, அவரது சொத்தில் 50% அவரது மனைவிக்கும், மீதமுள்ள 50% அவரது பெற்றோருக்கு சமமாகப் பிரித்துக் கொடுக்கப்பட வேண்டும். ஆனால், லெட்வார்டு வெளிப்படைத்தன்மை இன்றிச் செயல்படுவதாகவும், போஸ்மேனின் முதிய பெற்றோரை நிதி ரீதியாகப் பாதிப்படையச் செய்வதாகவும் அவரது சகோதரர்கள் குற்றம் சாட்டுகின்றனர்.