உக்ரைன் போரினால் ருமேனிய வான்வெளியில் அடிக்கடி ஊடுருவும் ட்ரோன்களை சுட்டு வீழ்த்த ருமேனியா புதிய முடிவை எடுத்துள்ளது. சமீபத்தில் F-16 போர் விமானங்கள் மூலம் மூன்று ட்ரோன்கள் வெற்றிகரமாக அழிக்கப்பட்டுள்ளன.
2022 பிப்ரவரியில் உக்ரைன் மீது ரஷ்யா படையெடுத்ததிலிருந்து, ருமேனிய வான்வெளியில் ட்ரோன்கள் ஊடுருவும் சம்பவங்கள் தொடர்ந்து இருந்து வருகின்றன. இதற்கு முன் வெறும் எச்சரிக்கைகளை மட்டும் விடுத்த ருமேனியா, தற்போது ஊடுருவும் ட்ரோன்களை சுட்டு வீழ்த்தும் புதிய அணுகுமுறையை கையாண்டு வருகிறது. சமீபத்தில், ரஷ்யாவின் தாக்குதல்கள் தீவிரமடைந்த நிலையில், ருமேனிய விமானிகள் F-16 போர் விமானங்களைப் பயன்படுத்தி மூன்று ட்ரோன்களை சுட்டு வீழ்த்தியுள்ளனர்.
இந்த ஊடுருவலால் ரஷ்ய தூதர் விசாரணைக்கு அழைக்கப்பட்டு, ஒரு ரஷ்ய தூதர் வெளியேற்றப்பட்டுள்ளார். கடந்த மே மாதம் ஒரு ட்ரோன் குடியிருப்பின் மீது விழுந்து தாய் மற்றும் குழந்தை காயமடைந்த சம்பவம், ருமேனியாவின் பாதுகாப்பு போக்கையே மாற்றியுள்ளது. 2022 முதல் இதுவரை 50 முறை ட்ரோன்கள் அல்லது அவற்றின் பாகங்கள் ருமேனிய மண்ணில் கண்டறியப்பட்டுள்ளன.
ருமேனியா அதிபர் நிகுசோர் டான், இந்த ஊடுருவல்களை ரஷ்யாவின் பொறுப்பாகக் கூறி, விமானிகளின் நடவடிக்கையைப் பாராட்டினார். இது வெறும் ருமேனியாவின் முடிவு மட்டுமல்ல, நேட்டோ அமைப்பின் நிலைப்பாட்டிலும் ஏற்பட்டுள்ள மாற்றத்தின் அடையாளமாகப் பார்க்கப்படுகிறது.