உக்ரைன் போருக்கு ரஷ்யா நிதி திரட்டுவதைத் தடுக்கும் வகையில், இந்தியா மற்றும் சீனா உள்ளிட்ட ரஷ்ய எண்ணெயை வாங்கும் நாடுகள் மீது 100% வரை வரி விதிக்க வழிவகை செய்யும் புதிய மசோதாவை அமெரிக்க செனட் நிறைவேற்றியுள்ளது.
உக்ரைன் மீதான ரஷ்யாவின் போருக்கு நிதி வழங்குவதை தடுக்கும் நோக்கில், ரஷ்யா மற்றும் அதன் முக்கிய பெட்ரோலிய இறக்குமதி நாடுகளான இந்தியா, சீனா உள்ளிட்ட நாடுகளை தண்டிக்கும் மசோதாவிற்கு அமெரிக்க செனட் ஒப்புதல் அளித்துள்ளது. 'லிண்ட்சே ஓ. கிரஹாம் சாங்க்ஷனிங் ரஷ்யா அண்ட் ஈரான் ஆக்ட் 2026' என்று பெயரிடப்பட்டுள்ள இந்த மசோதா, செனட்டில் 86-11 என்ற வாக்குகள் கணக்கில் நிறைவேற்றப்பட்டது. இந்த மசோதாவின்படி, ரஷ்யாவிடமிருந்து எண்ணெய் மற்றும் எரிவாயுவை இறக்குமதி செய்யும் முதல் ஐந்து நாடுகளின் பொருட்கள் மீது 100 சதவீத வரி விதிக்க அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்பிற்கு அதிகாரம் வழங்கப்படுகிறது.
தற்போது ரஷ்யாவிடமிருந்து அதிக அளவில் எரிபொருள் வாங்கும் நாடுகளின் பட்டியலில் சீனா, இந்தியா, அஜர்பைஜான், ஹங்கேரி மற்றும் ஸ்லோவாக்கியா ஆகிய நாடுகள் முன்னணியில் உள்ளன. இந்த மசோதா ரஷ்யாவுடன் சேர்த்து, ஈரான் எரிசக்தி துறையில் முதலீடு செய்யும் நிறுவனங்களை தண்டிக்கும் 1996-ஆம் ஆண்டின் ஈரான் பொருளாதார தடை சட்டத்தையும் 2031 வரை நீட்டிக்கிறது. இருப்பினும், இந்த மசோதா டிரம்பிற்கு வர்த்தக ரீதியாக கூடுதல் அதிகாரங்களை வழங்கும் என்று சில ஜனநாயகக் கட்சியினர் எச்சரித்துள்ளனர். இந்த மசோதா தற்போது ஒப்புதலுக்காக பிரதிநிதிகள் சபைக்கு அனுப்பப்பட்டுள்ளது.