ஹார்முஸ் ஜலசந்தியின் மீது அமெரிக்கா முழு கட்டுப்பாட்டைக் கொண்டுள்ளது என்று அதிபர் டிரம்ப் கூறியதை ஈரான் திட்டவட்டமாக மறுத்துள்ளது. போர் மற்றும் பொருளாதாரத் தடைகள் நீக்கப்படும் வரை ஜலசந்தியைத் திறக்கப்போவதில்லை என ஈரான் எச்சரித்துள்ளது.

ஹார்முஸ் ஜலசந்தியை அமெரிக்கா கட்டுப்படுத்துகிறது என்று அதிபர் டிரம்ப் மீண்டும் கூறியுள்ளதை ஈரான் நிராகரித்துள்ளது. அமெரிக்கா மற்றும் ஈரான் இடையேயான போரை முடிவுக்குக் கொண்டுவரப் பேச்சுவார்த்தைகள் நடைபெற்று வந்தாலும், இதுவரை போர் நிறுத்தம் ஏற்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

இது குறித்துப் பேசிய ஈரான் தேசிய பாதுகாப்பு கவுன்சிலின் தலைவர் மொஹ்சென் ரெஸாயி, அமெரிக்கா அனைத்து நிபந்தனைகளையும் பூர்த்தி செய்யும் வரை ஹார்முஸ் ஜலசந்தியைத் திறக்க மாட்டோம் என்று கூறினார். குறிப்பாக, அமெரிக்கா போரையும் முற்றுகையையும் முடிவுக்குக் கொண்டுவந்து, ஈரானின் முடக்கப்பட்ட சொத்துக்களை விடுவிக்க வேண்டும் என்று அவர் வலியுறுத்தியுள்ளார்.

மேலும், லெபனான் மற்றும் காசா உள்ளிட்ட பிராந்தியப் போர் நிறுத்தத்திற்கு அமெரிக்கா ஒப்புக்கொள்ளும் வரை இந்த நிலை தொடரும் என்றும் அவர் தெரிவித்தார். அமெரிக்க அதிகாரிகள் கூறும் கட்டுப்பாட்டுத் தகவல்கள் யதார்த்தத்தை மாற்றாது என்றும் அவர் சாடினார்.