அமெரிக்க போர்க்கப்பலான யுஎஸ்எஸ் ஆபிரகாம் லிங்கனில் இருந்து அமெரிக்க கடற்படை வீரர்கள் கடலில் குதித்து தற்கொலைக்கு முயன்றதாக செய்திகள் பரவின. மத்திய கிழக்கில் நிலவும் பதற்றம் மற்றும் பணிச்சுமை காரணமாக அவர்கள் இந்த முடிவை எடுத்ததாக கூறப்பட்ட நிலையில், அமெரிக்க செண்ட்காம் (CENTCOM) இதன் பின்னணியில் உள்ள உண்மையை விளக்கியுள்ளது.

மத்திய கிழக்கில் நிலவி வரும் பதற்றமான சூழ்நிலையில், அமெரிக்காவின் 'யுஎஸ்எஸ் ஆபிரகாம் லிங்கன்' போர்க்கப்பலில் உள்ள அமெரிக்க கடற்படை வீரர்கள் கடுமையான மன அழுத்தத்தால் பாதிக்கப்பட்டு, கடலில் குதித்து தற்கொலைக்கு முயன்றதாக சமூக ஊடகங்களில் செய்திகள் பரவின. ஈரான் உடனான மோதல் மற்றும் நீண்ட கால பணியமர்த்தல் இதற்குக் காரணம் என்று கூறப்பட்டது.

இருப்பினும், இந்த செய்திகளை அமெரிக்க மத்திய கட்டளை (CENTCOM) மற்றும் பாதுகாப்பு அதிகாரிகள் திட்டவட்டமாக மறுத்துள்ளனர். யுஎஸ்எஸ் ஆபிரகாம் லிங்கன் தொடர்பான செய்திகள் தவறான முறையில் சித்தரிக்கப்பட்டுள்ளதாக பாதுகாப்புத்துறை அதிகாரிகள் தெளிவுபடுத்தியுள்ளனர்.

தற்போது, நீண்ட நாட்களாக பணியில் இருக்கும் களைப்படைந்த வீரர்களை தாயகம் திருப்பி அனுப்பும் நோக்கில், அமெரிக்கா தனது மற்றொரு போர்க்கப்பலான 'யுஎஸ்எஸ் ஜார்ஜ் வாஷிங்டனை' ஈரான் நோக்கி அனுப்பியுள்ளது. இந்த புதிய கப்பல் ஆபிரகாம் லிங்கன் கப்பலுக்குப் பதிலாக அங்கு நிலைநிறுத்தப்படும், இதனால் தற்போதைய வீரர்கள் வீடு திரும்ப வழிவகை செய்யப்பட்டுள்ளது.