ஜப்பானிய கேமிங் நிறுவனமான நிண்டெண்டோ (Nintendo) நிறுவனத்தின் வர்த்தக முத்திரையைத் தவறாகப் பயன்படுத்துவதைத் தடுக்க டெல்லி உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. பாட்னாவைச் சேர்ந்த ஒரு நிறுவனம் இந்த பெயரைப் பயன்படுத்துவது பொதுமக்களிடையே குழப்பத்தை ஏற்படுத்தும் என்று நீதிமன்றம் கூறியுள்ளது.

ஜப்பானிய கேமிங் நிறுவனமான நிண்டெண்டோ கோ லிமிடெட் தாக்கல் செய்த வர்த்தக முத்திரை வழக்கில், பாட்னாாவைச் சேர்ந்த ஒரு ரியல் எஸ்டேட் நிறுவனம் 'NINTENDO' என்ற பெயரைப் பயன்படுத்துவதைத் தடுக்க டெல்லி உயர் நீதிமன்றம் இடைக்காலத் தடை விதித்துள்ளது. இந்திய நிறுவனத்தின் பெயர் ஜப்பானிய நிறுவனத்தின் பதிவு செய்யப்பட்ட வர்த்தக முத்திரையுடன் ஏமாற்றும் வகையில் ஒத்திருப்பதாகவும், இது நுகர்வோர்களைக் குழப்பக்கூடும் என்றும் நீதிமன்றம் கருதியது.

நிண்டெண்டோ இந்தியா பிரைவேட் லிமிடெட் நிறுவனத்தின் ஒரு இயக்குனர், எதிர்காலத்தில் இந்த பெயரைப் பயன்படுத்தும் எண்ணம் இல்லை என்று எழுத்துப்பூர்வமாக ஒப்புக்கொண்டார். சூப்பர் மரியோ பிரோஸ் மற்றும் போகிமான் போன்ற உலகப் புகழ்பெற்ற கேம்களைக் கொண்ட நிண்டெண்டோ நிறுவனம், 1889 முதல் இந்த பெயரைப் பயன்படுத்தி வருவதாக நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.