BSNL-ன் 449 ரூபாய் ரீசார்ச் விளம்பரத்தில் 84,000 வினாடிகள் இலவச அழைப்பு என்று கூறப்பட்டிருந்தது, ஆனால் அழைப்பு பயன்பாடு ஒரு நிமிட அடிப்படையில் கழிக்கப்பட்டது. இந்த முறைகேட்டிற்காக BSNL நிறுவனம் 15,000 ரூபாய் இழப்பீடு வழங்க கேரள நுகர்வோர் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.
BSNL நிறுவனம் தனது ரீசார்ச் விளம்பரத் தாளில் 84,000 வினாடிகள் இலவச அழைப்பு என்று குறிப்பிட்டிருந்தும், நடைமுறையில் அழைப்பு நேரத்தை ஒரு நிமிட அடிப்படையில் கணக்கிட்டது முறையற்ற வணிக நடைமுறை என்று கேரள நுகர்வோர் ஆணையம் தெரிவித்துள்ளது. இது சேவையில் குறைபாடு என்றும் ஆணையம் கூறியுள்ளது.
இது ஒரு அச்சடிப்புப் பிழை என்று BSNL வாதிட்டது. இருப்பினும், ஒரு சேவை வழங்குநர் வழங்கும் எழுத்துப்பூர்வ தகவல்களை நம்புவதற்கு நுகர்வோருக்கு உரிமை உண்டு என்று ஆணையம் சுட்டிக்காட்டியது. தவறான தகவல்களால் வாடிக்கையாளர் தனது முடிவை எடுத்ததால், அந்தப் பிழையின் பொறுப்பை நுகர்வோர் ஏற்க முடியாது என்று கூறப்பட்டுள்ளது.
புகார்தாரர் சி வி ஜோஸ் எதிர்கொண்ட மன உளைச்சல் மற்றும் சிரமங்களுக்காக, BSNL நிறுவனம் 15,000 ரூபாய் இழப்பீடு வழங்க வேண்டும் என்று ஆணையம் உத்தரவிட்டுள்ளது. ரீசார்ச் ஏற்கனவே பயன்படுத்தப்பட்டதால் அந்தத் தொகையைத் திரும்ப வழங்கத் தேவையில்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.