சத்தீஸ்கரில் ஒரு இளைஞர் தன்னை கடித்த பாம்பை கழுத்தில் மாட்டி கொண்டு 14 கிமீ பைக்கில் மருத்துவமனைக்குச் சென்றுள்ளார். அவர் ஒரு ஸ்நேக் கேட்சராகப் பணியாற்றி வருகிறார்.

சத்தீஸ்கரின் காங்கேர் மாவட்டம் பகாஞ்சுர் கிராமத்தைச் சேர்ந்த தேவ்ஜித் சர்க்கார் கடந்த எட்டு ஆண்டுகளாகப் பாம்பு பிடிப்பவராக (Snake Catcher) பணியாற்றி வருகிறார். குடியிருப்புகளுக்குள் வரும் பாம்புகளைப் பிடித்து பாதுகாப்பான இடங்களுக்கு விடுப்பதே இவரது பணி. சமீபத்தில் ஒரு பாம்பைப் பிடிக்க முயன்றபோது, அது அவரைத் தாக்கியது.

அந்தப் பாம்பு விஷத்தன்மை வாய்ந்ததா என்பதைச் சரிபார்க்கும் நோக்கில், அந்தப் பாம்பை தனது கழுத்தில் மாட்டி கொண்டு 14 கிலோமீட்டர் தூரம் பைக்கில் பயணித்து மருத்துவமனைக்குச் சென்றார். மருத்துவர்கள் பரிசோதித்ததில் அந்தப் பாம்பு விஷமற்றது என்று தெரியவந்தது. பாம்பு கழுத்தில் மாட்டி மருத்துவமனைக்கு வருவது மிகவும் ஆபத்தானது என்றும், அது விஷப் பாம்பாக இருந்திருந்தால் நிலைமை மோசமாகியிருக்கும் என்றும் மருத்துவர் சஞ்சீத் வைஷ்ணவ் தெரிவித்தார். தேவ்ஜித் தற்போது நலமாக உள்ளார்.