இரயில்வே உள்கட்டமைப்பு திட்டங்களை விரைவுபடுத்த, இந்திய வன சேவை மற்றும் வருவாய்த் துறை போன்ற பிற அரசுப் பிரிவுகளிலிருந்து அதிகாரிகளை நியமிக்க இரயில்வே வாரியம் திட்டமிட்டுள்ளது.
இந்திய இரயில்வே தனது பாரம்பரிய பணியாளர் தொகுப்பிற்கு அப்பால் உள்ள அதிகாரிகளுக்கு கதவுகளைத் திறக்க உள்ளது. உள்கட்டமைப்பு திட்டங்களை விரைவாக நிறைவேற்ற, இந்திய வன சேவை, வருவாய்த் துறை மற்றும் பிற பொது பயன்பாட்டு நிறுவனங்களிலிருந்து அதிகாரிகள் அயற்பணியில் (deputation) நியமிக்கப்பட உள்ளனர். இதற்காக மண்டல இரயில்வேகளின் கட்டுமானப் பிரிவுகள் தன்னாட்சி அமைப்புகளாக மாற்றப்பட்டு மறுசீரமைக்கப்பட உள்ளன.
அடிக்கடி நடக்கும் இடமாற்றங்களால் ஏற்படும் இடையூறுகளைக் குறைத்து, உள்கட்டமைப்பு மேம்பாட்டில் மட்டும் கவனம் செலுத்தும் நிபுணர் குழுவை உருவாக்குவதே இந்த மாற்றத்தின் நோக்கமாகும். மத்திய தேர்வு வாரியங்கள் (CSB) மூலம் தகுதியானவர்கள் தேர்ந்தெடுக்கப்படுவார்கள். தேர்வு செய்யப்பட்ட அதிகாரிகள் திட்ட மேலாண்மை, செயற்கை நுண்ணறிவு கருவிகள் மற்றும் அதிவேக இரயில் கட்டுமானம் போன்ற நவீன தொழில்நுட்பங்களில் கட்டாயப் பயிற்சி பெறுவார்கள்.