ஜந்தர் மந்தர் போராட்டக்காரர்களை அவமதித்த வழக்கில் கைது செய்யப்பட்ட பாஜக அறிவுசார் பிரிவின் முன்னாள் ஒருங்கிணைப்பாளர் டி.ஜி. மோகன் தாஸிற்கு நீதிமன்றம் ஜாமீன் வழங்கியுள்ளது.
திருவனந்தபுரத்தில் உள்ள சிஜேஎம் நீதிமன்றம், பாஜக அறிவுசார் பிரிவின் முன்னாள் ஒருங்கிணைப்பாளர் டி.ஜி. மோகன் தாஸிற்கு நிபந்தனைக்குட்பட்டு ஜாமீன் வழங்கியுள்ளது. அடுத்த மூன்று நாட்களுக்கு விசாரணைக்கு ஒத்துழைக்க வேண்டும் என்றும், மீண்டும் இதுபோன்ற குற்றங்களில் ஈடுபடக்கூடாது என்றும் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
கைது செய்வதற்கு முன்னதாக ஏன் நோட்டீஸ் வழங்கப்படவில்லை என்று நீதிமன்றம் கேள்வி எழுப்பியது. இதற்கு பதிலளித்த அரசு தரப்பு வழக்கறிஞர், நோட்டீஸ் அளித்திருந்தால் அவர் தலைமறைவாகியிருப்பார் என்று தெரிவித்தார். ஆனால், இது அரசியல் உள்நோக்கம் கொண்ட நடவடிக்கை என்று மோகன் தாஸின் வழக்கறிஞர் வாதிட்டார்.
ஜந்தர் மந்தரில் போராடிய மாணவிகள் மற்றும் பெண்களை ஆபாசமாகவும், வன்முறை தூண்டும் வகையிலும் பேசியதற்காக சைபர் போலீஸாரால் அவர் கைது செய்யப்பட்டார். போராட்டக்காரர்களை சுட்டுக்கொல்வது குறித்து அவர் பேசிய வீடியோ சமூக வலைதளங்களில் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது.