அதிமுகவின் மாநில கொள்கை பரப்பு துணைச் செயலாளரும் செய்தித் தொடர்பாளருமான அப்சரா ரெட்டி, கனத்த இதயத்துடன் கட்சியிலிருந்து விலகுவதாக அறிவித்துள்ளார். அவர் ஜெயலலிதாவின் வழியைப் பின்பற்றி மக்கள் சேவையில் ஈடுபடுவார் எனத் தெரிவித்துள்ளார்.

அதிமுகவின் மாநில கொள்கை பரப்பு துணைச் செயலாளரும், செய்தித் தொடர்பாளருமான அப்சரா ரெட்டி, கட்சியிலிருந்து விலகுவதாக அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார். தேர்தல் முடிவுகளுக்குப் பிறகு அதிமுகவில் இருந்து பல முக்கியத் தலைவர்கள் விலகி வரும் சூழலில், அப்சராவின் இந்த முடிவு கட்சிக்கு பெரும் பின்னடைவாகக் கருதப்படுகிறது.

தனது அறிக்கையில், ஜெயலலிதா மீது கொண்ட மதிப்பும் அன்பும் தான் தன்னை அதிமுகவுடன் இணைத்தது என்றும், அவரைத் தனது அரசியல் வழிகாட்டியாகக் கருதி வந்ததாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். இந்த முடிவு கோபத்திலோ அல்லது மரியாதையின்றியோ எடுக்கப்பட்டதல்ல, மாறாகத் தனது கொள்கைகளுக்கு உண்மையாக இருக்க வேண்டும் என்ற எண்ணத்தினால் எடுக்கப்பட்ட ஒரு முடிவென அவர் தெளிவுபடுத்தியுள்ளார்.

அதிமுக வழங்கிய வாய்ப்புகளுக்கு நன்றி தெரிவிக்கும் அவர், இனி தனது அரசியல் பயணம் வேறு பாதையில் செல்லும் என்று கூறியுள்ளார். இருப்பினும், 'அம்மாவின்' வழியில் தொடர்ந்து மக்களுக்காகப் போராடுவேன் என்றும், மக்களின் குரலாகவும், பாலமாகவும் இருப்பேன் என்றும் அவர் உறுதியளித்துள்ளார்.