உலகம் முழுவதும் நூறு கோடிக்கும் அதிகமான மக்களின் கல்லீரலில் அதிகப்படியான கொழுப்பு படிந்துள்ளது. செயற்கை நுண்ணறிவு (AI) கருவிகள் மூலம் இந்த பாதிப்பை ஆரம்பத்திலேயே கண்டறிந்து உயிர்களைக் காப்பாற்ற முடியும் என்று ஆராய்ச்சியாளர்கள் கருதுகின்றனர்.

உலகளவில் சுமார் 30% வளர்ந்தவர்கள் கொழுப்பு கல்லீரல் நோயால் பாதிக்கப்பட்டுள்ளனர். கல்லீரலில் கொழுப்பு 5% முதல் 10% வரை அதிகரிப்பது வீக்கம் மற்றும் திசு பாதிப்புக்கு வழிவகுக்கிறது. இந்த நோய் பெரும்பாலும் எந்த அறிகுறியும் காட்டாமல் வருவதால், பாதிப்பு தீவிரமடைந்த பிறகே கண்டறியப்படுகிறது, இது உயிருக்கு ஆபத்தான நிலையை ஏற்படுத்தக்கூடும்.

இந்தச் சூழலைச் சமாளிக்க செயற்கை நுண்ணறிவு (AI) ஒரு சிறந்த தீர்வாக அமையும் என்று நிபுணர்கள் கூறுகின்றனர். AI தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி நோயாளிகளின் மருத்துவப் பதிவுகள் மற்றும் இரத்தப் பரிசோதனை முடிவுகளை மிக விரைவாக ஆய்வு செய்து, யாருக்கு அதிக ஆபத்து உள்ளது என்பதைக் கண்டறிய முடியும். மேலும், சாதாரண மார்பு எக்ஸ்-ரே (Chest X-ray) படங்களைக் கூட ஆய்வு செய்து, கல்லீரல் கொழுப்பை 82% துல்லியத்துடன் கண்டறியும் திறன் AI-க்கு இருப்பதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன.

ஆரம்பக்கட்டத்திலேயே இந்த நோயைக் கண்டறிந்துவிட்டால், உணவுக்கட்டுப்பாடு மற்றும் வாழ்க்கைமுறை மாற்றங்கள் மூலம் கல்லீரலை மீண்டும் ஆரோக்கியமான நிலைக்குக் கொண்டு வர முடியும். AI மூலம் தானியங்கி முறையில் ஆபத்து மதிப்பீடுகளைச் செய்வதன் மூலம் மருத்துவர்கள் விரைவாகச் சிகிச்சை அளிக்க முடியும்.