முதலீட்டு மோசடி மற்றும் வங்கி கணக்குகளைத் திருட முயன்ற 94 மோசடி கால் மையங்களை உக்ரைன் அதிகாரிகள் மூடிவிட்டனர். இந்த நடவடிக்கையில் பெருமளவிலான ரொக்கம், தங்கம் மற்றும் மின்னணு சாதனங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.

உக்ரைன் காவல்துறையினர் மற்றும் ஜெர்மன் காவல்துறையின் கூட்டு நடவடிக்கையில், நாடு முழுவதும் இயங்கி வந்த 94 மோசடி கால் மையங்கள் முடக்கப்பட்டன. இந்த கும்பல் போலி முதலீட்டுத் திட்டங்கள் மற்றும் வங்கி அதிகாரிகளைப் போல நடித்து மக்களின் பணத்தையும் வங்கித் தகவல்களையும் திருடி வந்தது. இந்தத் தேடுதல் வேட்டையில் மொத்தம் 411 இடங்களில் சோதனை நடத்தப்பட்டது.

இந்த சோதனையின் போது 2 மில்லியன் டாலர், 64,000 யூரோக்கள் மற்றும் 1 கிலோ தங்கக் கட்டிகள் உட்படப் பல கோடி மதிப்புள்ள சொத்துக்கள் பறிமுதல் செய்யப்பட்டன. மேலும், ஆயிரக்கணக்கான கணினிகள், தொலைபேசிகள் மற்றும் சிம் கார்டுகளும் கண்டெடுக்கப்பட்டன. இந்த மோசடி கும்பல் ஐரோப்பிய ஒன்றிய நாடுகளைக் குறிவைத்து செயல்பட்டது என்பது விசாரணையில் தெரியவந்துள்ளது.

குற்றவாளிகள் போலி வங்கிப் பணியாளர்கள் போல நடித்து, கணக்குகளை முடக்குவோம் என்று மிரட்டி பணத்தைப் பறித்தனர். இந்தச் செயலில் ஈடுபட்டவர்கள் மீது உக்ரைன் குற்றவியல் சட்டத்தின் கீழ் வழக்குத் தொடரப்பட்டுள்ளது. இதற்காக அவர்களுக்கு 12 ஆண்டுகள் வரை சிறைத் தண்டனை கிடைக்க வாய்ப்புள்ளது.