2026 FIH ஹாக்கி உலகக் கோப்பையில் நீல நிறத்திற்குப் பதிலாக காவி நிற ஜெர்சியைப் பயன்படுத்துவது குறித்த சர்ச்சைக்கு ஹாக்கி இந்தியா விளக்கம் அளித்துள்ளது. தொழில்நுட்ப காரணங்களுக்காகவே இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாகத் தெரிவித்துள்ளது.
2026 FIH ஹாக்கி உலகக் கோப்பையில் இந்திய அணியின் ஜெர்சி நிறத்தை நீலத்திலிருந்து காவி நிறமாக மாற்றுவது குறித்த ரசிகர்களின் எதிர்ப்பிற்கு ஹாக்கி இந்தியா விளக்கம் அளித்துள்ளது. முன்னாள் கேப்டன் வீரன் ரஸ்குயின்கா போன்றவர்கள் இந்த மாற்றத்தை விமர்சித்த நிலையில், இது அணியின் அடையாளத்தைப் பாதிக்கும் என்று வாதிட்டனர்.
இதற்குப் பதிலளித்த ஹாக்கி இந்தியா, இந்த முடிவு வீரர்கள் மற்றும் பயிற்சியாளர்களுடன் ஆலோசித்து எடுக்கப்பட்டது என்று கூறியுள்ளது. சர்வதேச ஹாக்கி மைதானங்கள் தற்போது நீல நிற செயற்கை தரைப்பகுதியைக் கொண்டுள்ளதால், நீல நிற ஜெர்சி மைதான நிறத்தோடு கலந்துவிடுவதால் வீரர்களின் பார்வையில் தெளிவு இருக்காது என்ற தொழில்நுட்பக் காரணத்திற்காக இந்த மாற்றம் செய்யப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், காவி நிறம் இந்தியாவின் தேசியக் கொடியின் முக்கிய நிறம் என்பதையும், இது தைரியம் மற்றும் தேசியப் பெருமையின் அடையாளமாகவும் உள்ளது என்பதையும் ஹாக்கி இந்தியா சுட்டிக்காட்டியுள்ளது. ஹர்மன்பிரீத் சிங் தலைமையிலான இந்திய அணி, 51 ஆண்டுகளுக்குப் பிறகு இரண்டாவது முறை ஹாக்கி உலகக் கோப்பையை வெல்லத் தயாராகி வருகிறது.