சுமார் 10 ஆண்டுகளுக்குப் பிறகு இன்ஸ்டாகிராம் தனது லோகோ எழுத்துக்களில் மாற்றத்தைக் கொண்டு வந்துள்ளது. ஆனால், புதிய வடிவமைப்பில் உள்ள 'r' எழுத்து குழப்பத்தை ஏற்படுத்துவதால், பயனர்கள் இதை 'Instagzam' என்று அழைக்கத் தொடங்கியுள்ளனர்.

இன்ஸ்டாகிராம் தனது வார்டுமார்க்கில் (வார்த்தை லோகோ) மாற்றத்தைக் கொண்டு வந்துள்ளது. இது கிட்டத்தட்ட ஒரு தசாப்தத்திற்குப் பிறகு செய்யப்பட்டுள்ள முதல் மாற்றமாகும். இன்ஸ்டாகிராம் தலைவர் ஆடம் மொஸேரி இந்த புதிய வடிவமைப்பு மிகவும் நவீனமாகவும் கூர்மையாகவும் இருப்பதாகக் கூறியுள்ளார். இந்த மாற்றம் 'Instagram' என்ற சொல்லுக்கு மட்டுமே பொருந்தும்; புகழ்பெற்ற இளஞ்சிவப்பு மற்றும் ஆரஞ்சு நிற கேமரா ஐகான் அப்படியே உள்ளது.

இந்த சிறிய மாற்றம் இணையத்தில் பெரிய விவாதத்தை கிளப்பியுள்ளது. குறிப்பாக, புதிய வடிவமைப்பில் உள்ள 'r' எழுத்து சரியாகத் தெரியாததால், மக்கள் இதை 'Instagzam' என்று வாசிக்கிறார்கள். சமூக வலைதளங்களில் பயனர்கள் இதை கிண்டல் செய்து வருகின்றனர். இந்த ட்ரெண்டில் சாட்ஜிபிடி (ChatGPT) மற்றும் ஸ்விக்கி (Swiggy) போன்ற நிறுவனங்களும் இணைந்து வேடிக்கையான பதிவுகளைப் பகிர்ந்துள்ளன.