பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் (PoK) நடைபெறும் JAAC போராட்டத்தை ஒடுக்க பாகிஸ்தானின் உளவு அமைப்பான ISI அனுப்பிய 'அமைதிக்குழு'வில், ஜெய்ஷ்-இ-முகமது அமைப்பின் மூத்த தளபதி இடம்பெற்றுள்ளது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் (PoK) மக்களின் உரிமைகளுக்காக நடைபெற்று வரும் JAAC போராட்டத்தை ஒடுக்க, பாகிஸ்தான் உளவு அமைப்பான ISI ராவலாகோட் பகுதிக்கு 'அமைதிக்குழு' என்ற பெயரில் ஒரு தூதுக்குழுவை அனுப்பியுள்ளது. ஆனால், இந்த குழுவில் தடைசெய்யப்பட்ட ஜெய்ஷ்-இ-முகமது பயங்கரவாத அமைப்பின் மூத்த கமாண்டர் இலியாஸ் காஷ்மீரி இடம்பெற்றுள்ளதாக வெளியாகி உள்ள தகவல் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஒரு வீடியோ பதிவில் அவர் கேமராவில் இருந்து தப்பிக்க முயல்வது தெளிவாகத் தெரிகிறது.

அமைதி பேச்சுவார்த்தை என்ற பெயரில் அனுப்பப்பட்ட குழுவில் ஒரு பயங்கரவாத கமாண்டர் ஏன் இருக்கிறார் என்ற கேள்வி எழுந்துள்ளது. இதற்கிடையில், லஷ்கர்-இ-தொய்பா பயங்கரவாத அமைப்பும் இந்த போராட்டத்திற்கு எதிராக களமிறங்கியுள்ளது. அவர்கள் போராட்டக்காரர்களை 'துரோகிகள்' என்று முத்திரை குத்தி, போராட்டத்தை திசைதிருப்ப தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.