சுதந்திர தின கொண்டாட்டத்தை முன்னிட்டு டெல்லி நகரம் மற்றும் செங்கோட்டை பகுதியில் கடுமையான பாதுகாப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. 25,000க்கும் மேற்பட்ட காவலர்கள் மற்றும் துணை ராணுவத்தினர் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.
சுதந்திர தின கொண்டாட்டங்களை முன்னிட்டு டெல்லி நகரம் மற்றும் செங்கோட்டை பகுதியைச் சுற்றி பல அடுக்கு பாதுகாப்பு வளையம் அமைக்கப்பட்டுள்ளது. பிரதமர் நரேந்திர மோடி செங்கோட்டையில் தேசியக் கொடியை ஏற்றி வைத்து நாட்டு மக்களுக்கு உரையாற்றவுள்ளார் என்பதை முன்னிட்டு இந்த பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.
செங்கோட்டையின் உள்ளேயும் வெளியேயும் 1,000-க்கும் மேற்பட்ட சிசிடிவி கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளன. இவை செயற்கை நுண்ணறிவு (AI) தொழில்நுட்பத்துடன் இணைக்கப்பட்டுள்ளன. ஒரு பிரத்யேக கட்டுப்பாட்டு அறையிலிருந்து இந்த கேமராக்கள் நேரலையாகக் கண்காணிக்கப்பட்டு, ஏதேனும் அசம்பாவிதம் நடந்தால் உடனடியாக நடவடிக்கை எடுக்கத் தயாராக உள்ளன.
கடந்த ஆண்டு ஏற்பட்ட நிகழ்வுகளைக் கருத்தில் கொண்டு இந்த அதிரடி பாதுகாப்பு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்று காவல்துறை அதிகாரி ராஜா பந்தியா தெரிவித்துள்ளார். முக்கிய இடங்கள், சந்தைகள் மற்றும் போக்குவரத்து மையங்களில் சிறப்புப் படையினர் குவிக்கப்பட்டுள்ளனர். மேலும், பொதுமக்கள் மற்றும் அழைக்கப்பட்டவர்கள் சிரமமடையாத வகையில் வாகன மற்றும் மக்களின் நடமாட்டம் கண்காணிக்கப்பட்டு வருகிறது.