ரஷ்யா-உக்ரைன் போரில் உயிரிழக்கும் ராணுவ வீரர்களின் இழப்பீட்டுத் தொகையைத் திருடிட 'பிளாக் விடோ' (கருப்பு விதவை) எனப்படும் மோசடி கும்பல் ரஷ்யாவில் பரவி வருகிறது. இவர்கள் வீரர்களை விரைவாகத் திருமணம் செய்து கொண்டு அவர்களின் சட்டபூர்வ வாரிசுகளாக மாறுகின்றனர்.

உக்ரைன் போரில் ரஷ்ய வீரர்களின் உயிரிழப்புகள் அதிகரித்து வரும் நிலையில், ஒரு புதிய வகை மோசடி ரஷ்யாவில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி வருகிறது. 'பிளாக் விடோ' என்று அழைக்கப்படும் மோசடி கும்பல், போர்க்களத்திற்குச் செல்லும் வீரர்களையோ அல்லது உயிருக்கு போராடும் வீரர்களையோ மிக விரைவாகத் திருமணம் செய்து கொள்கிறார்கள். ரஷ்ய சட்டப்படி, போரில் ஒரு வீரர் உயிரிழக்கும் போது அவரது சட்டபூர்வ வாரிசுகளுக்கு 5 மில்லியன் ரூபிள் (சுமார் 59.5 லட்சம் ரூபாய்) இழப்பீடு வழங்கப்படுகிறது.

இந்தத் தொகையைத் தட்டிப்பறிக்கத் திட்டமிட்டு, வீரர்களின் குடும்பத்தினரைத் தவிர்த்துவிட்டு, தெரியாத நபர்கள் வீரர்களைத் திருமணம் செய்து கொள்கின்றனர். செயின்ட் பீட்டர்ஸ்பர்க்கில் ஒரு தந்தை போருக்குச் செல்லும் இரண்டு நாட்களுக்கு முன்பு ஒரு பெண்ணைத் திருமணம் செய்து கொண்டதை அவரது மகள் உயிரிழப்பிற்குப் பின்னரே அறிந்தார். இதன் மூலம் அந்தப் பெண் சட்டபூர்வ வாரிசு நிலையை அடைந்து, இழப்பீட்டுத் தொகையைப் பெற முடிந்தது.

இந்த மோசடி முறையைத் தடுக்க ரஷ்ய நாடாளுமன்ற உறுப்பினர்கள் கடும் கோரிக்கைகளை எழுப்பத் தொடங்கியுள்ளனர். ராணுவ மருத்துவமனைகளில் கூட இந்த மோசடி நடப்பதாகக் கூறப்படுகிறது. முறையான சட்டப் பாதுகாப்பு மற்றும் கடுமையான தண்டனை மூலம் வீரர்களின் உண்மையான குடும்பங்களைக் காக்க வேண்டிய அவசியம் ஏற்பட்டுள்ளது.